Thursday, 26 May 2011

சிவபுராணம்

திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

Wednesday, 4 May 2011

இட்ட லிங்க அபிடேக மாலை

திருச்சிற்றம்பலம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

இட்ட லிங்க அபிடேக மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு 
   பதினொருவர் மிளிர்பீடமேற் 
  படியிலை யைவகைபி படுமீசர் தாநிதம் 
   பத்திலெண் வித்தையிறைவர் 
 சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா 
   தாக்கியம் மூர்த்திவதனந் 
  தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி 
   தாளுற்ற நாடுத்திலே 
 நந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர 
   நற்சிகையி னிற்சூனிய 
  நட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற 
   ஞானமய மோனநடுவோ 
 டந்தமற முந்துபர மானந்த நீநந்த 
   வபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      1 

 நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து 
   நன்றா மகோரத்தினு 
  நவையற்ற புருடத்து மாகமமொ ரவ்வைந்து 
   நல்கியீ சானத்திலே 
 பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல் 
   பெருமைபெறு மருமைவிதியிற் 
  பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல் 
   பெற்றிலேன் மற்றடியனேன் 
 வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன் 
   வேட்டொருவர் மாட்டருளினான் 
  மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின் 
   வேண்டல்வேண் டாமையிலையா 
 லாடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா 
   லபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      2 

 நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ 
   நடுவுபிர மப்புழையெனு 
  நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல 
   நண்ணிய மைம்மூவகை 
 யிவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர் 
   வின்றிச்சி வாகாரமா 
  யெதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு 
   மென்கனவு ஞாதுருவொடே 
 யுவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு 
   மொண்சுழுத் தியுஞானமே 
  யொளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர் 
   வுறுமதீ தமுமாகுநல் 
 லவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      3 

 ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந் 
   தோகைபெறு மன்றியுடைமை 
  யுதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத் 
   துள்ளதிற் பெரிதளிக்கும் 
 பொருளதா யினுமதனி னினியதா யினுமவன் 
   புந்திமகிழ் வுற்றிடுவனால் 
  புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு 
   புண்ணியத் தெய்வநதிதான் 
 மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை 
   மற்றென்முடி யிற்றெறிப்பின் 
  வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை 
   மக்கணினை வுற்றுய்ந்திட 
 வருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந் 
   தபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      4 

 கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர் 
   களம்வாழ்வு மேவவணிவாய் 
  கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி 
   கதிர்போல வேயுநெடுமா 
 லொருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற 
   முடையார்மு னோடிவருவா 
  யுலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை 
   யுமைகாண வாடல்புரிவாய் 
 மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ 
   மணவாள னாவியுதவா 
  மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர 
   வருவாயெ னாமுனழையா 
 வருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      5 

 ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு 
   முயர்புரா தனசரிதமோ 
  டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை 
   யொண்சுவத் திகமேற்றுபு 
 சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு 
   சுவத்திகா ரோகணமுநூல் 
  சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந் 
   தொல்விபூ திப்பட்டமு 
 மாகலச நீராட்டு கலசாபி டேகமு 
   மருவுசிவ நோக்குவிக்கும் 
  வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு 
   வனைசுவா யதமுமெனுமே 
 ழாகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      6 

 போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும் 
   பொன்றுலகம் விட்டமலனார் 
  பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய 
   பொன்பெண்மண் ணாசைநெறியிற் 
 பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப் 
   பத்தாறு தத்துவமறப் 
  பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ 
   பாரென்னு மான்மிகமுமே 
 மேயசடு லிங்கமுட னாறங்க மாகுமொரு 
   மெய்யனுக் கிரகநிலையும் 
  விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு 
   மிக்கசத் தியசுத்தமு 
 மாயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      7 

 கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக் 
   கிரசித்த மென்னும்விரதங் 
  கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு 
   கின்றவிந் திரியார்ப்பித 
 முடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ 
   னுண்மைகொ ளிலிங்கநிசமே 
  யுயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி 
   லொன்றாகி நின்றுபேதம் 
 விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு 
   மிக்ககுரு வருள்புரியவே 
  மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும் 
   வேதமுடி யாவுமுணரா 
 தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யவிடேக மாடியருளே.      8 

 நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி 
   நவையிலை யமுதமாடி 
  நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே 
   நறுநெய்பா றயிராடியே 
 மெல்லமலர் மதுவாடி யின்கழைள் சாறாடி 
   மென்பழச் சாறாடியே 
  விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி 
   விதியினமை நபனமாடி 
 யொல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல் 
   லுத்திகொடு பைத்ததலைய 
  வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருவுடை 
   யொதுங்கவிட மின்றியசைய 
 வல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ 
   யபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      9 

 நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ் 
   நண்ணுநர கந்தருவர்தா 
  நவிலுமவர் தமினமர கந்தருவ றவர்தம்மி 
   னாடரிய தேவரவரிற் 
 சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன் 
   சொன்முறையி னூறுமடிமேற் 
  றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிகு 
   சுகவேலை புகலீகுவாய் 
 தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந் 
   தகுதிபெறு பகுதிபுருட 
  தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு 
   சமயரென வெமைவிடாம 
 லருளினினை யடைதலுறு மரியபத மருளுமவ 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.    

Tuesday, 3 May 2011

வணக்கம்

    
             
வணக்கம்

வலைப்பதிவின் நுணுக்கங்கள்அறிய விரும்புகிறேன்அனுபவசாலிகள் உதவவும்.